இறைவனின் இறுதி தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களை குறித்து கிறிஸ்தவர்களின் பழைய,புதிய ஏற்பாடுகளில் ஏராளமான முன்னறிவிப்புக்கள் காணப்படுகிறது.அந்த தொடரின் புதிய ஏற்பாட்டில் இயேசு முன்னறிவித்த மற்றுமொரு முன்னறிவிப்பு.
'' இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.''(யோவான் 16:5-15)
மேலே எடுத்தக்காட்டப்பட்ட முன்னறிவிப்பில் இயேசு கூறுவதாவது நான் போகப்போகிறேன்.நான் போய் இன்னுமொரு சகாயரானவரை அனுப்புவேன்.இவ்வாறு கூறிய பின்னர் இயேசு கூறிய விடையங்களையும் அது எவ்வாறு முஹம்மது நபிக்கு பொருந்துகிறது என்பதையும் பட்டியலிடுவோம்.
1.''அவர் வந்து, பாவத்தை குறித்தும்,நீதியை குறித்தும்,நியாயத்தீர்ப்பை குறித்தும், உலகத்தை கண்டித்து உணர்த்துவார்.''
இயேசு கூறியவாறு முஹம்மது நபியவர்கள் பாவத்தை குறித்தும்,நீதியை குறித்தும்,நியாயத்தீர்ப்பை குறித்தும், கண்டித்து போதனை செய்தார்.நீதியை நிலைநாட்டுவதிலே கண்டிப்புடன் நடந்துகொண்டார்.உலக அழிவு நாளைக்குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்தார்.எனவே இயேசு முன்னறிவித்த சத்திய ஆவியானவர் முஹம்மது நபியவர்கள்தான்.
2.'' இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்''
எமக்குத் தெரியும் முஹம்மது நபியவர்கள் ஒரு மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து விடையங்களிலும் வழிகாட்டியுள்ளார்கள்.கழிவரை ஒழுக்கங்களைக்கூட அவர் மக்களுக்கு போதித்து சகல சத்தியத்திற்குள்ளும் மக்களை வழி நடத்தினார்.
3. '' அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.''
அவர் சுயமாக பேசாமல் கேளவிப்படுவதை அதாவது வானிலிருந்து அறிவிக்கப்படும் செய்திகளை,வரப்போகின்ற விடையங்களை உங்களுக்கு அறிவிப்பார் என்று இயேசு கூறியதை உண்மைப்படுத்தும் முகமாக முஹம்மத் நபியவர் வரப்போகின்ற மறுமை வாழ்வு,முஹம்மத் நபிக்குப்பின் உலகில் நடைபெரும் விடையங்கள் அனைத்தையும் இறைவனிடம் பெற்று மிகத் துள்ளியமாக அறிவித்ததார்.
4.''அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.''
முஹம்மது நபியவர்கள் இயேசுவின் போதனைகளிலிருந்து மக்களுக்கு எடுத்துக்கூறி இயேசுவை புகழ்ந்து கூறியுள்ளார்.குர்ஆனிலும் இயேசுவைப் புகழ்ந்து பல வசனங்கள் காணப்படுகிறது.இயேசுவுக்குப்பின் வேறு யாரும் இயேசுவை இவ்வாறு புகழ்ந்துள்ளார்களா? முஹம்மது நபி கூறினார் மர்யமுடைய மகன் ஈஸா (இயேசு) சாத்தான் (பிசாசு) தீண்டாத மனிதர்.பல அற்புதங்களை செய்தவர்.தந்தையில்லாமல் பிறந்தவர் என்றெல்லாம் இயேசுவைப் புகழ்ந்த ஒரே தீர்க்கதரிசி முஹம்மது நபிதான்.
எனினும் கிறிஸ்தவர்கள் இந்ந முன்னறிவிப்பு தூய ஆவியான தேவதூதன் காபிரியேலைக்குறித்து கூறப்பட்டதாக கூறுவதுண்டு.ஆனால் தூய ஆவியானவர் இயேசு வாழ்ந்த காலத்திலும் இருந்தது.இயேசு ஞானஸ்நானம் அடைந்தபோதும் தூயஆவியானவர் புறாவைப்போல் வானிலிருந்து இறங்கியதாக பைபிள் கூறுகிறது.எனவே இந்த முன்னறிவிப்பு தெளிவாக இயேசுவுக்குப்பின் வரப்போகின்ற ஒருவரைக் குறித்ததே என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.
கிறிஸ்தவர்களே! இயேசு முன்னறிவித்த சத்திய ஆவியானவரை ஏற்றுக்கொள்ள ஏன் தயக்கம்?
Comments
Post a Comment