உலக மக்களுக்கு வழிகாட்ட இறைவன் காலத்திற்கு காலம் பல இறைத்தூதர்களையும், வேதங்களையும் இறக்கியருளினான். அந்த தொடரின் இறுதியாக இறைவனால் முஹம்மது நபிக்கு இறக்கப்பட்டதே குர்ஆனாகும். குர்ஆனைப்பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குர்ஆன் இறைவேதமல்ல, முஹம்மது நபி தாமாக கற்பனைசெய்து கூறியதே குர்ஆன். குர்ஆன் ஷைத்தானிடமிருந்து வந்தது என்றெல்லாம் பல விமர்சனங்கள் உள்ளது;. எனினும் இவர்களது இந்த வாதம் அடிப்படையற்றது. உண்மையில் குர்ஆன் இறைவேதம்தான் என்பதை ஆராய்ந்துதான் பல சகோதரர்கள் இஸ்லாத்தின் பக்கம் வேகமாக நுழைந்த வண்ணமுள்ளனர். குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.
குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.
1.முரண்பாடின்மை!
குர்ஆனை முஹம்மது நபிதான் கற்பனை செய்து கூறியதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் குர்ஆனை முஹம்மது நபி கற்பனை செய்து கூறியிருந்தால் பல முரண்பாடுகள் அதில் இருந்திருக்கும். 23 வருடகாலமாக குர்ஆன் முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. முஹம்மது நபி கற்பனை செய்து குர்ஆனை கூறியிருந்தால் நிச்சயமாக 23 வருடங்களில் பல முரண்பாடுகளை காணக்கூடியதாக இருந்திருக்கும். மனிதனது பல கூற்றுக்களை காலத்திற்கு காலம் மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். ஆனால் குர்ஆனுடைய எந்த ஒரு வசனமும் குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்தாது எனக்கூற முடியாது. இது இறைவனிடமிருந்து வந்ததால்தான் எந்த முரண்பாடுமற்ற நூலாக இன்றைக்கும் குர்ஆன் திகழ்கிறது. அதனால்தான் குர்ஆன் முழு மனிதகுலத்திற்கும் சவாலாக கூறுகிறது இறைவனிடமிருந்து குர்ஆன் வந்ததால்தான் இதில் முரண்பாடில்லை. மனிதர்களது கற்பனையாக குர்ஆன் இருக்குமானால் பல முரண்பாடுகளை மக்கள் காண்பார்கள்.
2.குர்ஆனின் உயர்ந்த மொழிநடை!
நபிகள் நாயகம் இறைவனால் அருளப்பட்டதாக அறிமுகப்படுத்திய குர்ஆன் மனிதர்களது மொழிநடைக்கு முற்றிலும் வித்தியாசமான மொழிநடையை கொண்டது. அரபு மொழியிலேயே மிக உயர்ந்த இலக்கியமாக 14 நூற்றாண்டுகளாக குர்ஆன் திகழ்கிறது. ஆனால் இலக்கியங்களில் காணப்படுகின்ற பொய், ஆபாசம், மிகைப்படுத்தல், சமாளிப்புகள் எதுவுமே குர்ஆனில் கிடையாது என்பது குர்ஆனுக்கே உள்ள சிறப்பாகும். முஹம்மது நபியை பொருத்தவரை அவருக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. அப்படியிருக்கும்போது அரபு இலக்கிய அறிஞர்களே மூக்கில் விரலை வைக்குமளவுக்கு குர்ஆனின் இலக்கிய நடை அன்றும், இன்றும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அரபுமொழியில் உயர்ந்த இலக்கிய நடை குர்ஆனில் உள்ளபோதும் சாதாரண மக்களுக்கும் எளிதில் விளங்குமளவுக்கு குர்ஆனின் நடை உள்ளது. முஹம்மது நபியின் போதனைகள் ஹதீஸ் நூற்களில் பதியப்பட்டுள்ளது. அந்த மொழிநடைக்கும், குர்ஆனின் மொழி நடைக்கும் பாரிய வித்தியாசங்கள் இருப்பதும் குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனையாக இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது.
3.விஞ்ஞான உண்மைகள்!
நவீன விஞ்ஞான கண்டபிடிப்புக்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இன்றைய உலகத்தை பொறுத்தவரை விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் சாதாரண விடையமாக இருக்கலாம். ஆனால் முஹம்மது நபியின் காலகட்டம் விஞ்ஞானத்தைப்பற்றி எந்த அறிவும் இல்லாத காலகட்டம். முஹம்மது நபியோ எழுத, வாசிக்கத் தெரியாத மனிதர். அவரது சமூகமும் அந்த நிலையில்தான் இருந்தது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் இறைவனிடமிருந்து தனக்கு அருளப்பட்டதாக முஹம்மது நபி அறிமுகப்படுத்திய குர்ஆனானது பல விஞ்ஞான உண்மைகளை உலகத்திற்கு கூறிக்கொண்டிருக்கிறது.
உலகம் உருண்டை, பூமி சுழல்கிறது, பூமியை சுற்றிக் கோள்கள், பெருவெடிப்புக் கொள்கை, சந்திரனின் ஒளி பிரதிவிம்ப ஒளி, கருவறையில் குழந்தையின் வளர்ச்சி படிமுறை, தேனியை பற்றிய உண்மைகள், மழை எவ்வாறு உருவாகிறது, ஓரங்களில் குறையும் பூமி, இரு கடல்கள், விரல் ரேகை, புவியீர்ப்பு சக்தி, அனைத்திலும் ஜோடிகள், விண்வெளிப் பயணம், தேன் எவ்வாறு உருவாகிறது?, கருவில் உருவாகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது ஆண், பால் எங்கே உற்பத்தியாகிறது?, வேதனையை உணரும் நரம்பு தோள்களில்தான உள்ளது, பூமியின் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதாத வண்ணம் மலைகளை முலைகளாக அறைந்துள்ளது, என்று இன்னும் ஏராளமான விஞ்ஞான உண்மைகளை குர்ஆன் உலகத்திற்கு அறிவிக்கின்றது. இந்த விஞ்ஞான உண்மைகளை நிச்சயமாக முஹம்மது நபியால் கற்பனை செய்து கூறவே முடியாத காலகட்டத்தில் குர்ஆன் இதை பேசுகிறது என்றால் இது இறைவனது வேதம் என்பதை குர்ஆன் நிரூபிக்கிறது. ஒரு சாதாரண எழுத, படிக்கத்தெரியாத முஹம்மது நபியால் சுயமாக இவற்றை நிச்சயமாக கூறமுடியாது.
4.குர்ஆனின் சவால்!
குர்ஆன் இறைவேதமல்ல, முஹம்மது நபிதான் குர்ஆனை கற்பனை செய்து கூறினார் என்ற கூற்றுக்கு குர்ஆன் ஒரு சவாலை விடுகிறது. முஹம்மது நபி குர்ஆனை கற்பனை செய்து கூறுவதாக நீங்கள் கூறுவதாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்து உதவியாளர்களையும் அழைத்துக்கொண்டு குர்ஆனை போன்று ஒன்றை கொண்டு வாருங்கள் என்பதே அந்த சவாலாகும். 1400 வருடங்களாக குர்ஆனின் இந்த சவால் முறியடிக்காமல் இருப்பதுவும் குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.
ஆகவே இஸ்லாத்தையும், குர்ஆனையும் மறுக்கும் மக்கள் இவ்வுண்மைகளை ஆராய்ந்து, கற்று இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்பதை ஏற்று மறுமையில் (பரலோக ராஜ்ஜியத்தில், பூர்வ ஜென்ம பூமியில்) வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Comments
Post a Comment