இஸ்லாத்தை அறிந்துகொள்வதற்கு இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள்,போதனைகள்,முஹம்மது நபியுடைய வாழ்க்கை வழிமுறை என்பவற்றை கற்பது மிக அவசியமாக இருக்கிறது.ஆகவே இஸ்லாத்தை கற்பதாயின் அதன் அடிப்படையாக திகழுவது எது என்பதை அறிந்து அதை கற்பதன் மூலமே இஸ்லாத்தை மிகச் சரியாக தெரிந்துகொள்ள முடியும். இஸ்லாத்தின் போதனைகள் இரண்டு வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.1.குர்ஆன்,2.ஹதீஸ்கள் (முஹம்மது நபியுடைய வழிகாட்டல்கள்)
1.குர்ஆன் ஓரு அறிமுகம்.
குர்ஆன் என்று இன்று முஸ்லிம்களிடையே இருக்கும் நூல்தான் இஸ்லாத்தின் முதலாவது அடிப்படை மூலாதாரமாகும்.முஹம்மது நபிக்கு அவருடைய 40வது வயதில் முதலாவது இறைச்செய்தி ஜிப்ரியீல் என்ற வானவ தூதரின் மூலம் இறைவனால் அருளப்பட்டது.அன்று தொடக்கம் 23 ஆண்டுகளாக கால,சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைச் செய்திகள் சிறிது சிறிதாக முஹம்மத் நபிக்கு அருளப்பட்டது.அவ்வாறு அருளப்பட்ட இறைச் செய்திகளை முஹம்மத் நபியும் அவரது சமூகத்தினரும் மனப்பாடம் செய்திருந்தனர்.இன்னும் சிலர் எழுதியும் வைத்திருந்தனர்.குர்ஆன் என்பது 23வருடங்களாக முஹம்மத் நபிக்கு அருளப்பட்ட இறைச் செய்திகளின் தொகுப்பாகும்.
குர்ஆனில் மனிதர்களுக்கு தேவையான சட்டதிட்டங்கள்,கட்டளைகள்,போதனைகள்,வரலாற்று சம்பவங்கள்,விஞ்ஞான உண்மைகள் என்று பல அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது.முஸ்லிம்கள் முதலாவது ஏற்று நடக்கவேண்டியது குர்ஆனிலுள்ள இறைக்கட்டளைகளைத்தான்.
2.ஹதீஸ்கள் (முஹம்மது நபியின் போதனைகள்)
ஹதீஸ் என்றால் செய்தி அல்லது தகவல் என்று பொருள்படும். முஸ்லிம்களின் இரண்டாவது அடிப்படை மூலாதாரமாக திகழ்வது ஹதீஸ்களாகும்.அவை முஹம்மது நபி சொன்ன செய்திகள்,அவர்கள் செய்து காட்டியவைகள்,அங்கரித்தவைகள் என்பவைகளின் தொகுப்பாகும்.இவ்வாறு தொகுக்கப்பட்ட நூற்களில் 6 நூற்கள் ''ஸஹீஹுஸ் ஸித்தா (மிக நம்பகமான 6 நூற்கள்) என்று அழைக்கப்பகிறது.அந்த 6 நூற்களிலும் புஹாரி,முஸ்லிம் என்ற 2 நூற்கள் பிரதான இடத்தை வகிக்கிறது.
ஆக குர்ஆன் என்பது முழுக்க முழுக்க இறைவனது செய்தியாகவும்,ஹதீஸ் என்பது முஹம்மது நபியின் போதனைகளாகவும் இருக்கிறது.இவை இரண்டிற்கும் இடையே வார்த்தைப் பிரயோகங்களில் பெரியளவிலான வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம்.குர்ஆனின் மொழி நடை முஹம்மது நபியின் ஹதீஸ்களில் கையாளப்பட்டுள்ள மொழிநடைக்கு முற்றிலும் வித்தியாசமாகவுள்ளது. எனவே குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இந்த மொழி நடையும் ஒரு சான்றாக இருக்கிறது. முஹம்மது நபியை அப்படியே பின்பற்றுமாறு குர்ஆனில் இறைவன் கட்டளையிட்டுள்ளதால் முஹம்மது நபியுடைய வாழ்க்கை குறிப்புகள்,கட்டளைகள்,போதனைகள், அனைத்தும் ஹதீஸ் நூற்களாக இன்று வரை பாதுகாக்கப்பட்டு;ள்ளது.
குர்ஆன்,ஹதீஸ் இந்த இரண்டுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களாகும்.அதை கற்பதன் மூலமே இஸ்லாத்தை மிகச் சரியாக தெரிந்துகொள்ள முடியும்.
Comments
Post a Comment