பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசி யார்?

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.

இறைவனது இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி முன்னைய வேதங்களி கூறப்பட்டுள்ளதாக அல்குர்ஆன் கூறுகின்றது அந்த வகையில் யூத,கிறிஸ்தவர்களின் வேத நூலான பழைய ஏற்பாட்டில் (தோரா) வில் பல முன்னறிவிப்புக்கள்  காணப்படுகின்றது. அந்த முன்னறிவிப்புக்கள் இயேசுவை குறிப்பதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.அவற்றின் உண்மை நிலையை சற்று நோக்குவோம்.

பழைய ஏற்பாட்டின் எசாயா புத்தகத்தின் 42வது அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள முன்னறிவிப்பு

''இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.''ஏசாயா 42:1

தாசன் என்ற சொல் அடிமை என்ற அர்த்தத்தை கொடுக்கும் சொல்லாகும்.கிறிஸ்தவர்கள் இயேசுவை குமாரன் என்றே சொல்லுகிறார்கள்.இங்கே கர்த்தர் குறிப்பிடுவது தனது தாசனைப் பற்றியே.ஒரு வேளை கிறிஸ்தவர்கள் இங்கே தாசன் என்றுதானே கூறப்படுகிறது.இது எப்படி முஹம்மத் நபியைப் பற்றி மட்டும் இருக்க முடியும் என்ற கேள்வியைக் கேட்கலாம்.அப்படியானால் அந்த வசனத்தின் இறுதியை நோக்குங்கள் ''அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.'' என்று கூறப்பட்டுள்ளது.இயேசுவோ  இஸ்ரவேலர்களுக்காக அனுப்பட்டதாக அவரே கூறியதாக பைபிளில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.ஆனால் முஹம்மத் நபியவர்கள் எல்லா ஜாதிகளுக்கும் இஸ்லாத்தை பரப்பினார்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.

''அவர் கூக்குரலிடவுமாட்டார்இ தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.'' ஏசாயா 42:2

இது நபி (ஸல்) அவர்களது குணங்களை வெளிப்படுத்துகிறது

''அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.'' ஏசாயா 42:3

''அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.'' ஏசாயா 42:4

அதேபோன்று நியாயத்தை நிலை நிறுத்துவதிலே தளராமல், பதறாமல் இருப்பார் என்றும் அவர் போதிக்கும் மார்க்கத்தை எற்றுக்கொள்ள பல தீவுகள் காத்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதுவும் முஹம்மத் நபிக்கு மட்டுமே பொருந்துகிறது.ஏனெனில் இயேசுவுடைய  மார்க்கத்தை இஸ்ரவேலர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசுவின்  காலத்தில் ஏனைய நாடுகளுக்கு கிறிஸ்தவம் பரவவுமில்லை.

''வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும, அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.'' ஏசாயா 42:5

''நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்'' ஏசாயா 42:6

மேலும் மேழும் இந்த வசனத்தில் கூறப்பட்டதுபோல் இயேசு யாரையும் சிறைகளில் இருந்து விடுவிக்கவில்லை.ஆனால்  முஹம்மத் நபியவர்கள் அடிமைகளை சிறைகளிலிருந்து விடுவித்து அடிமைத்தனத்தை ஒழித்தார்கள்.

''கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.'' ஏசாயா 42:7

மீண்டும்  கர்த்தர்  கூறுகிறார் வரவிருக்கும் தீர்க்கதரிசி ஜாதிகளுக்கு ஒளியாகவிருப்பார்.இங்கே கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு ஒளியாக இருப்பாரென்று கூறவில்லை.ஜாதிகளுக்கு ஒளியாக இருப்பார் என்றே கூறுகிறார்.குர்ஆனும் நபியவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் ஒளியாக அனுப்பப்பட்டார் என்றே கூறுகிறது.இயேசுவோ இஸ்ரவேலர்களுக்காக அனுப்பப்பட்டேனே அல்லாமல் மற்றபடியல்ல என்றே கூறினார்.

''பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின;புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.'' ஏசாயா 42:9

எனவே இந்த வசனத்தில் கர்த்தர் தான் நடக்கவிருக்கும் சம்பவங்கள் பற்றி அறிவிப்பதாக கூறுகிறார்.

''சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். ''ஏசாயா 42:10

ஏசாயா என்ற தீர்க்கதரிசி மேற் கூறப்பட்டவாறு மக்களை அழைத்து கூறிவிட்டு அடுத்து கூறுவதை கவனியுங்கள்.

''வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. ''ஏசாயா 42:11

பாலைவனங்களும் அதில் உள்ள ஊர்களிலும், கேதாரியர்கள்  குடியிருக்கும் ஊர்களிலும், மலை உச்சிகளிலும் மக்கள் உரத்த குரலில் கர்த்தரை துதிக்கட்டும் என்று கூறுகிறது.நிச்சயமாக இது முஹம்மத் நபியவர்களின் சமூகத்தையே குறிக்கின்றது. அவர்கள்தான் ஹஜ்காலங்களில் மலை உச்சிகளில் உரத்தக்  குரலில் கர்த்தரை லப்பைக் லப்பைக் என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

இங்கே இன்னுமொரு விடையத்தையும்  கவனிக்க வேண்டும்.கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது  என்று கூறப்பட்டுள்ளது.யார் இந்த கேதாரியர்.பைபிள் கூறுவதை கவனியுங்கள்

''பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம் '' ஆதியாகமம்:25:13

இஸ்மவேலுடைய இரண்டாவது மகனான கேதார் என்று பைபிள் கூறுகிறது.கேதாரியர்  என்பவர்கள் இஸ்மவேலின் மகனான கேதாரின் வழித்தோன்றல்களாவர்.அவர்களே அரபுக்கள்.முஹம்மத் நபியவர்கள் இஸ்மவேலின் (இஸ்மாயில் நபி) வழித்தோன்றலில் வந்தவர்கள்  என்பது உலகரிந்த உண்மை.எனவே பழைய ஏற்பாட்டின் இந்த முன்னறிவிப்பு முஹம்மத் நபியவர்களையே குறிக்கின்றது.இயேசுவையல்ல.

ஆகவே கிறிஸ்தவர்கள் உண்மையாகவே பைபிளை நம்புபவர்களாக இருந்தால் முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்றுக்  கொள்ளவேண்டும்.

குறிப்பு:இவ்வாக்கம் தென்னிந்திய அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் எழுதிய ''பைபிளில் நபிகள் நாயகம்'' என்ற புத்தகத்தின் உதவியோடு எழுதப்பட்டுள்ளது.

Comments