சத்திய மார்க்கம் ஓர் அறிமுகம்.

ஏக இறைவனின் சாந்தி சத்தியத்தை தேடும் ஒவ்வொருவரின் மீதும் உண்டாவதாக!

நாம் வாழும் உலகில் பல்வேறு மதங்கள் காணப்படுவதை நாம் அறிவோம்.அந்த மதங்களில் இஸ்லாம் ஒரு முக்கிய மார்க்கமாகத் திகழ்கிறது.இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த  வரை இது முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தே  பரவலாக மக்களிடையே காணக்கிடைக்கின்றது.ஆனால் இஸ்லாம் என்பது ஆதி மனிதனான ஆதமிலிருந்து முஹம்மது நபி வரை உலகிலே இருக்கின்ற ஒரு மார்க்கமாகும்.இப்போது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகவிருப்பது முழு 'உலகிற்கும் ஒரே இறைவன்,முஹம்மது இறைவனுடைய தூதர்'' என்றக் கொள்கையாகும்.இதை ஒருவன் ஏற்றுக்கொண்டால் அவன் முஸ்லிமாக மாறிவிடுவான்.

முஹம்மது  நபிக்கு முன் வாழ்ந்த சமூகங்களுக்கு  இறைவன் காலத்திற்கு காலம் இறைத்தூதர்களை அனுப்பினான்.அவர்கள் போதித்ததெல்லாம் 'ஒரே இறைவனை வணங்குங்கள்,எங்களை இறைவனது தூதராக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்ற போதனையாகும்.அந்த இறைத்தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்தவர்களே முஹம்மது நபியாவார்கள்.எனவே இறைத்தூதர்கள் கொண்டுவந்த மார்க்கம் ஒன்றாகத்தான் இருந்தது.காலத்திற்கு காலம் சட்டதிட்டங்கள் மட்டுமே மாற்றம் பெற்றது.இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை ஒரே இறைவனை வணங்குவதும்,அந்தந்த காலகட்டத்தில் வந்த இறைத்தூதர்களை  ஏற்று பின்பற்றுவதும்;.எனவே இயேசுவுக்குப்பின் வந்த முஹம்மத் நபியவர்கள் முழு  உலகத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு பிறகு  எந்த தூதரும் வரமாட்டார்கள். உலக முடிவு நாள் வரை அவர்களை நம்பி பின்பற்றுவதே எமக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

1.ஓரிறைக் கொள்கை. (தௌஹீத்)

இஸ்லாத்தின் முதலாவது கொள்கை ஒரே இறைவனை நம்பி அவனை மட்டுமே வணங்கவேண்டும்.எமது அனைத்து வணக்க வழிபாடுகளும் இறைவனுக்காகவே செய்யப்பட வேண்டும்.இறைவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்கக்கூடாது.அவனுக்கு மனைவி,பிள்ளைகள் இல்லை.பெற்றோர் இல்லை.அவனுக்கு பசி,தாகம்,களைப்பு,சோர்வு,தூக்கம் என்று மனிதனுக்கு காணப்படும் எந்த பலவீனங்களும் கிடையாது.அதே நேரம் அனைத்தையும் கண்கானிப்பவனாகவும்,அனைத்தையும் செவியுறுபவனாகவும் இருக்கிறான்.அவனுக்கு தொடக்கமோ,முடிவோ இல்லை.இஸ்லாம் அறிமுகப்படுத்தும் இறைவனை அறிய குர்ஆனின் அல்-இஹ்லாஸ் என்ற 112வது அத்தியாயத்தை படித்தால் இன்னும் நன்றாகப் புரியும்.

112:1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4. அன்றியும்இ அவனுக்கு நிகராக எவரும் இல்லை.


எனவே இப்படிப்பட்ட இறைவனை நம்பி அவனை மட்டுமே வணங்குவது இஸ்லாத்தின் முதலாவது அடிப்படை கொள்கையாகும்.

2.முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதர் என்று நம்பி ஏற்று அவரை பின்பற்றுதல்.

இறைவனது இறுதி தூதரான முஹம்மத் நபியை தூதராகவும்,இறைவனது அடிமையாகவும்  ஏற்றுக் கொள்வது இஸ்லாத்தின் இரண்டாவது கொள்கையாகும்.முஹம்மத் நபியவர்கள் வழிகாட்டியபடி சகல நிலைகளிலும் அவர்களை பின்பற்ற வேண்டும்.அவர்கள்தான் இறைவனது இறுதி தூதர் என்பதை நம்பவேண்டும்.இந்தத் தூதர் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விடையங்களிலும் மனித சமூகத்திற்குத் தேவையான அனைத்தையும் வழிகாட்டியுள்ளார்.அவற்றை நம் வாழ்வில் அப்படியே பின்பற்ற வேண்டும்.

இவை இரண்டும் இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கையாகும்.இதையே அரபியில் ''லா இலாஹ  இல்லல்லாஹ்,முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்''  என்று சொல்லப் படுகிறது. இதன் அர்த்தம் ''வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதராவார்'' என்பதாகும்.


Comments